புதுடெல்லி, ஜன.8: சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு புதிய இயக்குனராக நாகேஷ்வரராவை நியமித்து மத்திய அரசு எடுத்து நடவடிக்கை செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

அலோக்வர்மா உடனடியாக சிபிஐ இயக்குனராக பணியாற்றலாம் என்ற போதிலும் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும், இது குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய தேர்வுக்குழு முடிவெடுக் கும் என்றும் தீர்ப்பில் மேலும் கூறப் பட்டுள்ளது.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் கடந்த அக்டோபர் மாதத்தில மோதல் ஏற்பட்டது.

குஜராத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது அலோக் வர்மா குற்றஞ்சாட்டினார். இதே குற்றச்சாட்டை அலோக் வர்மா மீது அஸ்தானா கூறினார்.

உயர் பதவி வகிக்கும் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மத்திய அரசு தலையிட்டு இருவரையும் கடந்த அக்டோபர் மாதம் நள்ளிரவில் இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டு, இடைக்கால சிபிஐ இயக்குனராக இணை இயக்குனராக இருந்த நாகேஷ்வரராவை நியமித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக் கையை எதிர்த்து அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இருவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அறிக் கையை தாக்கல் செய்யுமாறு லஞ்சம் மற்றும் கண்காணிப்புதுறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

அதில் அலோக்வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு இரவோடு இரவாக சிபிஐக்கு இடைக்கால இயக்குனரை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அலோக் வர்மா இயக்குனர் பதவிக்கு திரும்பலாம் என்ற போதிலும் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கக்கூடாது என்றும், அவரது அந்தஸ்து குறித்து பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோரைக்கொண்ட தேர்வுக் குழுவே முடிவெடுக்கும் என்றும் தீர்ப்பில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அலோக்வர்மா சார்பில் பாலிநாரிமன் ஆஜராகி வாதாடினார். சிபிஐ இயக்குனர் பதவியை 2 ஆண்டு காலம் என நிர்ணயித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், உயர் பதவி வகிக்கும் இரு அதிகாரிகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொல்லும் பூனைகள் போல் சண்டையிட்டதால் மத்திய அரசுக்கு இந்த நடவடிக்கையை தவிர வேறு வழியில்லை என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் நடவடிக்கை செல் லாது என வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு அரசுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.