சென்னை, ஜன.8: சென்னையை அடுத்த உத்தண்டியில் மூன்று நாட்கள் நடைபெறும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பிஜேபி தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் பிஜேபியின் செயல்பாடு, மக்களவைத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

ராஷ்டிரிய சுயம் ஷேவக் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் சென்னையை அடுத்த உத்தண்டியில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ்சின் அரசியல் அமைப்பான பிஜேபி, துணை அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத், அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிஜேபி தேசியத்தலைவர் அமித் ஷா நேற்று புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். ஏர்போர்ட்டில் இருந்து உத்தண்டிக்கு காரில் சென்றார். நேற்று மாலை கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமை தாங்கினார். இதில் அமித் ஷா பங்கேற்று பிஜேபியின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை எடுத்துரைத்தார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபியின் நிலைபாடு மற்றும் அரசின் கொள்கைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்றிரவே அமித் ஷா புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து இன்றும், நாளையும் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெறுகிறது.