சென்னை, ஜன.8: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது என்பதால் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்பட விட மாட்டோம் என்றார்.  சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் நாட்டிற்கே தமிழகம் உதாரணமாக திகழ்ந்து வருகிறது. தற்போது 69 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமுலில் உள்ள நிலையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவையில் நேற்று மத்திய அரசு கொண்டு வந்து, இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளது.

ஆகவே மத்திய அரசின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் சட்டசபையில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என்றார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக நாங்களும் செய்திகள் மூலம் அறிந்து கொண்டோம். சமூகநிதி பாதுகாப்பதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மண்டல் கமிஷன் கொண்டு வந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மிகைப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்றவுடன், அதனை எதிர்த்து முதல்ஆளாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.

அதுமட்டுமின்றி மாநில முதல்வர்களுக்கு கடிதம் மூலம் பாராளுமன்ற மத்திய அரசுக்குஎதிராக குரல் கொடுக்க வேண்டும்என வலியுறுத்தியவர் ஜெயலலிதா. அதன்பின்னர் 1991 -96 ஆட்சி காலத்தில் நான் பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சராக இருந்தேன், அப்போது 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அனைத்து கட்சி தலைவர்களையும் டில்லி அனுப்பி அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவை சந்திக்க வைத்து, அதனை தமிழகத்தில் நிறைவேற்றி காட்டி இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா, அந்த வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் அரசுக்கு வரவில்லை, இது மத்திய அரசின் கொள்கை முடிவு தான், ஆகவே 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் கொண்டு வந்தால் அப்போது அரசின் தனது முடிவை தெளிவுபடுத்தும் என்றார்.