திருநெல்வேலி, ஜன.8: திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தனது 3 வயது மகளை அரசு அங்கன்வாடியில் சேர்த்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் அடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.அந்த இடத்தில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டார்.

செங்கோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மிகப்பெரிய மதக்கலவரம் ஏற்படும் சூழலை சாதுர்யமாக செயல்பட்டு கலவரத்தை தடுத்ததால் அவர் வெகுவாக பாராட்டப்பட்டார்.

இந்நிலையில் கலெக்டர் ஷில்பா தனது 3 வயது மகள் கீதாஞ்சலியை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். மாவட்ட கலெக்டரின் செயலை அறிந்த பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.