புதுடெல்லி, ஜன.8: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து இயக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்ற போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இயங்குவதற்கு அனுமதி அளித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம்
சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, தங்கள் தரப்பு மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, இந்த மனு வருகிற 8-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கு இருந்த தடை நீங்கி உள்ளது.

சீராய்வு மனு

இந்த பிரச்சனையை சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் முதலமைச்சர் இதற்கு பதிலளிக்காததை தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, எந்த நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு திறக்க விடாது. உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.