சென்னை, ஜன.9: நகைக்கடைக்காரர் வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு ரெயில்மூலம் தப்பியோடிய கொள்ளையர்கள் இருவரை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்து, அனைத்தையும் மீட்டனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்துவருகிறார். அத்துடன், இவர் வீட்டின் அருகேயும் சொந்தமாக நகை கடை வைத்துள்ளார். இதனிடையே, கடந்த 7-ம் தேதிஅன்று வேலைநிமித்தமாக சந்தோஷ் வெளியில் சென்றுள்ளார்.

இவரது மனைவியும் வீட்டை பூட்டிக்கொண்டு உறவினருடன் வெளியில் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வீட்டிலுள்ள நகை, பணத்தை சுருட்டிச்சென்றுள்ளனர்.

அன்று மாலையில், சந்தோஷ் வீடு திரும்பியபோதுதான் வீட்டில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்க பணம் கொள்ளைப்போனது தெரியவந்தது.
இது குறித்து சந்தோஷ் அளித்த புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிப்பிரியா மேற்பார்வையில், கொருக்குப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில், சிசிடிவி பதிவின்மூலம், கொள்ளையர்களின் அடையாளம் தெரியவந்தது. சந்தோஷின் கடையில் 3 வருடமாக வேலை பார்த்துவந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரின் சகோதரர்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் ரெயில் மூலம் தப்பியிருக்கலாம் என்ற யூகத்தின்அடிப்படையில், ஆந்திரா மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் ரெயிலில் சோதனை நடைபெற்றது.

அப்போது, ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சென்றுக்கொண்டிருந்த ரெயிலில் கொள்ளையர்கள் இருப்பதை அறிந்ததையடுத்து, அந்த ரெயிலை நிறுத்தி, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கடந்த 1 மாதமாக அடிக்கடி வேலைக்கு விடுப்பு எடுத்ததால், தன்னை வேலையில் இருந்து நிறுத்தியதன் காரணமாக, கொள்ளையில் ஈடுபட்டதாக ஹன்ஸ்ராஜ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருடிச்சென்ற அனைத்தும் மீட்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.4.5 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.