சென்னை, ஜன.9: கிருஷ்ணகிரி அருகே காட்டுயானையை விரட்டும் போது யானை தாக்கி உயிரிழந்த வனக்காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டூர் தரப்பு, கண்டகானப்பள்ளி கிராமத்தின் அருகே 6.1.2019 அன்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பச்சபனட்டி தரப்பு, கோட்டட்டி கிராமத்தைச் சேர்ந்த வனக்காவலர் மாரப்பன் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

வனத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, வீர தீர செயல் மற்றும் அசம்பாவித சூழ்நிலையில் உயிரிழந்தால், அவர்களின் குடும்ப நலன் கருதி, வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை நான்கு லட்சத்திலிருந்து பத்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க 6.10.2017 அன்று ஆணையிட்டிருந்தேன்.இந்த ஆணையின் படி, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வனத்துறை மூலம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.