ரெயில் மறியலில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது

சென்னை

சென்னை, ஜன.9:  தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டி மற்றும் பெரம்பூரில் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்டோரை  போலீசார் கைது செய்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயமாக்கக்கூடாது, தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்களின் தொழிற் சங்கங்கள் மற்றும் சம்மேளனம் சார்பில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில், பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தை தவிர, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப்., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்பட 12 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனத்தை சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், 2-ம் நாளான இன்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆங்காங்கே போராட்டம் தொடர்ந்தது. சென்னை கிண்டி ரெயில் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ சௌந்தரராஜன் தலைமையில் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கத்தினர் இன்று காலை முற்றுகையிட்டு ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது, அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்த உதவி கமிஷனர் பாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து கைது செய்தனர்.

அதே போல் பெரம்பூரில் முன்னாள் எம்எலல்ஏ மகேந்திரன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 500க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் பொதுத்துறை வங்கிகளிலும் இன்று பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் காசோலைகள் தேக்கமடைந்தன. நேற்று 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் தேக்கமடைந்ததாக மதிப்பிடப்பட்டது. இன்று இது மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.