சென்னை, ஜன.9:பைனான்ஸ் பிரச்சனையால் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தை 3 ஏரியாக்களில் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் நீக்கியது. இதனால் நாளை திட்டமிட்டப்படி அனைத்து மாவட்டங்களிலும் படம் வெளியாகிறது.

சினிமா பைனான்சியர் உமாபதிக்கு கொங்கு மண்டல விநியோகஸ்தர் சாய்பாபா ரூ.78 லட்சம் பாக்கி வைத்துள்ளதால் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஏரியாக்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பைனான்சியர் உமாபதி நேற்று மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் இந்த 3 ஏரியாக்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை விதித்து தீர்ப்பு அளித்தனர். இதனிடையே, கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிடும் உரிமையை வினியோகஸ்தர்

சாய்பாபா வாங்கியிருந்தார். இவர் பெற்றிருந்த கடன் பாக்கி 78 லட்சம் ரூபாயை திருப்பி தராததால், இப்பகுதிகளில் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி சினிமா பைனான்சியர் உமாபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார்.

இந்நிலையில், தயாரிப்பு நிர்வாகம் நீதிமன்றத்தில் பாக்கி தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதம் உள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாகவும், விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்ததையடுத்து, படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர் உத்தரவிட்டார். இதனால் நாளை திட்டமிட்டப்படி விஸ்வாசம் படம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது.