சென்னை, ஜன.9: மெரினா புரட்சி என்ற படத்தை வெளியிட அனுமதிப்பது தொடர்பாக மத்திய சினிமா தணிக்கை வாரியம் ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா புரட்சி என்ற படம் தயாரிக்கப்பட்டு 90 நாட்களாகியும் தணிக்கைக்கு முறையாக உட்படுத்தப்படாமல் உள்ளது. இரண்டு முறை நிராகரிக்கப்பட்டமைக்கு இதுவரை எந்த காரணமும் சொல்லப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் பொங்கல் திருநாள் அன்று திரைப்படத்தினை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட வேண்டுமென படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.  சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2 முறை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிப்பட்ட நிலையில் அதற்கான காரணம் முறையாக கூறப்பட வில்லை. உண்மை சம்பவத்தின் அடிப்படையில்தான் படம் எடுக்கப்பட்டது என வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் தன்னிடம் உள்ள ஆவணங்களை 2 நாளில் தணிக்கை வாரியத்திடம் சமர்பிக்க வேண்டும். அதை பரீசிலித்து ஒரு வாரத்திற்குள் படத்தை வெளியிட அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார் .