சென்னை, ஜன.9:  போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே திருச்சி நகை வியாபாரியிடம் அரைக்கிலோ தங்கம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் போலீசாரிடம் பிடிப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருச்சியை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 68). நகை வியாபாரியான இவர் சென்னையில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி திருச்சிக்கு எடுத்துச்சென்று நகைகளாக மாற்றி சென்னையில் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். கடந்த மே மாதம் இவர் வழக்கம் போல் சென்னை சவுகார்பேட்டையில் இருந்து அரைக்கிலோ வாங்கிக்கொண்டு இரு சக்கரத்தில் எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து தங்க கட்டிகளை பறித்து சென்றது அவர்களை ரங்கராஜன் விரட்டி சென்ற போது வேகத்தடையில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக அவரது மகன் சீனிவாசன் வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் சார்லஸ் சாம் ராஜதுரை தலைமையில் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

இது தொடர்பாக மம்பட்டியான், ராஜகுமார், மகேந்திரகுமார், சித்திக், ஆனந்த் ஆகிய 5 பேரை கடந்த ஜூன் மாதம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் தங்கம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய ரகுமான் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை காவலில் எடுத்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி இம்ரான் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் இம்ரான் கொள்ளையடித்த தங்க கட்டிகளுடன் மும்பைக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இம்ரானை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு இம்ரான் சென்னைக்கு வந்திருப்பது குறித்த ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த இம்ரானை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் இவருக்கு திருட்டு தங்கத்தை விற்பதற்கு உதவியாக இருந்ததாக பையாசுதீன் (வயது 32) என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் கொள்ளையடித்த தங்கத்தை எங்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையடித்த தங்கத்தை மீட்டபதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் தங்கம் முழுவதும் மீட்கப்படும் என தெரிவித்தனர்.