ஓடும் ரெயிலை நிறுத்தி கொள்ளையர்கள் கைது

குற்றம்

சென்னை, ஜன.9:  நகைக்கடைக்காரர் வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு ரெயில்மூலம் தப்பியோடிய கொள்ளையர்கள் இருவரை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்து, அனைத்தையும் மீட்டனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்துவருகிறார். அத்துடன், இவர் வீட்டின் அருகேயும் சொந்தமாக நகை கடை வைத்துள்ளார். இதனிடையே, கடந்த 7-ம் தேதிஅன்று வேலைநிமித்தமாக சந்தோஷ் வெளியில் சென்றுள்ளார்.

இவரது மனைவியும் வீட்டை பூட்டிக்கொண்டு உறவினருடன் வெளியில் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வீட்டிலுள்ள நகை, பணத்தை சுருட்டிச்சென்றுள்ளனர்.

அன்று மாலையில், சந்தோஷ் வீடு திரும்பியபோதுதான் வீட்டில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்க பணம் கொள்ளைப்போனது தெரியவந்தது. இது குறித்து சந்தோஷ் அளித்த புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிப்பிரியா மேற்பார்வையில், கொருக்குப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில், சிசிடிவி பதிவின்மூலம், கொள்ளையர்களின் அடையாளம் தெரியவந்தது. சந்தோஷின் கடையில் 3 வருடமாக வேலை பார்த்துவந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரின் சகோதரர்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் ரெயில் மூலம் தப்பியதை அடுத்து ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சென்றுக்கொண்டிருந்த அந்த ரெயிலை நிறுத்தி கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.4.5 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.