திருச்சி, ஜன.9: திருச்சியில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தொழிற் சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் வங்கி, தபால் சேவை முடங்கியது ரூ.800 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிராகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போரா ட்டத்தை நேற்று முதல் தொடங்கினர். இன்றும் போராட்டத்தை தொடங்கினர்.

இதேபோல பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகளை இணைத்து ஒன்றாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், வாராக்கடன் வசூலிப்பதில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க கோரியும் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
தமிழகத்திலும் மத்திய தொழிற்சங்கத்தினருடன், மாநில தொழிற்சங்கத்தினர் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருச்சியிலும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. வேலைநிறுத்தத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். திருச்சி மத்திய, சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன.