சென்னை, ஜன.10: பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் இன்று வெளியான நிலையில் பல இடங்களில் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசமும் பொங்கல் வெளியீடாக இன்று முன்கூட்டியே வெளியாகியுள்ளன. படத்தின் சிறப்புக் காட்சிகளைக் காண நள்ளிரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் திரண்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு முதல் காட்சி என்பதால் ரசிகர்கள் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களும் திரையரங்குகளில் திரண்டிருந்தனர். பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றுகிறார். சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் சிவாவுடன் இணைந்து அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். அடிதடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாக பரவியது. அஜித்துக்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

முதல் காட்சியை நள்ளிரவில் வெளியிட அனுமதியில்லை என்று காவல்துறையினர் தடுத்ததால் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. அப்போது, சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேட்ட படத்தின் பேனரை சிலர் கிழித்து சேதப்படுத்தினர்.