சமீபத்திய ரஜினி படங்களில் மறக்(மறைக்)கப்பட்டிருந்த ரஜினியிசத்தை அவரின் ரசிகரான (கார்த்திக் சுப்புராஜ்) ‘பேட்ட’-ல் மரணமாஸ் ஆக கொடுத்துள்ளார்.

டார்ஜிலிங் பகுதியில் உள்ள கல்லூரி ஹாஸ்டலில் வார்டனாக பணியில் சேர்க்கிறார் ரஜினிகாந்த். அங்கு தங்கி இருக்கும் ஜூனியர் மாணவர்களை ராக்கி செய்து வருகிறார் பாபி சிம்ஹா. அதை ரஜினி தட்டி கேட்டு, அவர்களின் கொட்டத்தை அடக்குகிறார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் சனத், சிம்ரனின் மகளான மேஹா ஆகாஷை காதலிக்கிறார்.

அவர்களின் காதலுக்காக சிம்ரனிடம் தூது செல்கிறார் ரஜினி. இதனிடையே காதலர் தினத்தன்று அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க பாபி சிம்ஹா நினைக்கிறார். அப்போது ரஜினி குறுக்கிட்டு பாபி சிம்ஹாவை எச்சரித்து அனுப்புகிறார். இதனால் ஆத்திரமடையும் பாபி சிம்ஹா மற்றும் அவரது தந்தை ஆடுகளம் நரேன் ஆகியோர் ரஜினியை அடிக்க ஆட்களை அனுப்புகின்றனர். ஹாஸ்டலுக்கு வரும் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களால் ரஜினியையும், சனத்தையும் கொலை செய்ய நினைக்கின்றனர். ரவுடி கும்பலிடம் இருந்து ரஜினி, சனத்தை காப்பாற்றுகிறார். அப்போது ரஜினிக்கும் காயம் ஏற்படுகிறது. இதனையறிந்த அவரது நண்பர் மருத்துவமனைக்கு வந்து சனத்திடம் ரஜினி மதுரை பேட்டவேலு என்ற உண்மைகளை எடுத்துரைக்கும் போது இன்டர்வெல் பிளாக் வருகிறது. அதன் பிறகு பிளாஷ்பேக் விரியத்தொடங்குகிறது.

ரஜினி ஏன் வார்டனாக வேலை பார்க்கிறார்? எதற்காக சனத்தை ரஜினி பாதுகாக்கிறார்? அவரது குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது? என்பதே படத்தின் 2-ம் பாதி மீதி கதை.
பாட்ஷா, அண்ணாமலை படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படங்களில் அவரின் மாஸ் காட்சிகள் குறைவாகவே இருந்தன. ஆனால் இந்த படத்தில் மாஸ் ரஜினியை பார்ப்பதுடன், இளமையான ரஜினியையும் திரையில் ரசிக்க முடிகிறது. வில்லன்களை பந்தாடும் காட்சியுடன் ரஜினி திரையில் தோன்றுகிறார். அப்போது விசில் சத்தம் தியேட்டரில் காதை பிளக்கிறது. பின்னர் முதல் பாடலான மரணமாஸ் பாடலில் சூப்பர் ஸ்டார் ஆடும் ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

ஒவ்வொரு காட்சியிலும், தன்னுடைய நடிப்பாலும், ஸ்டெய்லாலும் கைதட்டல் பெறுகிறார். இடையே இடையே அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள், அவர் செய்யும் குசும்புகள் ரசிக்க வைக்கிறது. சண்டை காட்சிகளிலும் அதிர வைத்து மாஸ் காட்டி இருக்கிறார். படம் முழுக்க எக்கச்சக்கமான நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும், ரஜினி மட்டும் வைரம் போல் தனியாக ஜொலிக்கிறார்.

பெரிய பெரிய இயக்குனர்கள் ரஜினிக்காக கதையை வைத்து கொண்டு காத்திருக்கும் வேளையில் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜிடம் ஏன் ரஜினி தன்னை கொடுத்தார் என்ற பலரின் கேள்விகளுக்கு இந்த ‘பேட்ட’ படத்தின் மூலம் விடையளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் சேர்த்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை கொடுத்துள்ளார். முதல் பாதியில் திரைக்கதையில் விறுவிறுப்பு காட்டி இருக்கும் இயக்குனர் 2-ம் பாதியில் சுறுசுறுப்பு காட்டி இருக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்டை கொடுக்கிறார்.
அத்தனை கதாபாத்திரங்களையும் கச்சிதமாக காட்சிப்படுத்தி தானொரு தேர்ந்த இயக்குனர் என்பதை தமிழ் சினிமாவுக்கு சொல்லி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை 90களில் உள்ளது போல் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ரசிகர்களின் எண்ணத்தை நிறைவேற்றி உள்ளார்.

முதல் பாதியில் தாடியுடன் வயதான தோற்றத்திலும், 2-ம் பாதியில் பெரிய மீசையுடன் பட்டு-வேட்டி சட்டையிலும் வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார். இப்படி ரஜினியை அழகுப்படுத்தி பார்க்க அவரது ரசிகரான கார்த்திக் சுப்புராஜால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

திரிஷாவுக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும் அழகாகவும், நிறைவாகவும் நடித்துள்ளார். சில சீன்கள் வந்தாலும் சிம்ரன் இளமையாகவும், துள்ளலாகவும் உள்ளார். மாளவிகா மோகன், மேஹா ஆகாஷ், சசிகுமார், பாபிசிம்ஹா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இரண்டாம் பாதியை முழுமையாக ஆட்கொள்ளும் விஜய் சேதுபதியும், நவாசுதின் சித்திக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளனர். குறிப்பாக வடஇந்திய இந்துத்துவா கட்சி தொண்டனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

படம் வெளியாவதற்கு முன்பு பாடல்களை ஹிட்டாக்கி உள்ளார் அனிருத். படத்தில் காட்சிகளுடன் பாடல்களை பார்க்கும் போது மேலும் ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் பின்னி எடுத்துள்ளார். திருவின் ஒளிப்பதிவில் ரஜினி மட்டுமல்ல அத்தனை நட்சத்திரங்களும் அழகாக தெரிகின்றனர். ஒவ்வொரு காட்சியும் திரையில் பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘பேட்ட’- ரஜினியின் கோட்டை.

-கே. விஜய்ஆனந்த்