சென்னை, ஜன.10: பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம் வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசாக ரூ. ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட பெஞ்சானது, ரூ. ஆயிரம் ரொக்கப் பணம் வழங்க கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது. அதில், சர்க்கரை மட்டும் மற்றும் எந்தவித பொருட்களும் வேண்டாம் என்ற நிபந்தனையில் குடும்ப அட்டை பெற்றவர்களுக்கு ரூ. ஆயிரம் ரொக்கப்பணம் வழங்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர், நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன் இன்று காலை ஆஜராகி, பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே நிறையபேர் பொங்கல் பரிசு வாங்கி விட்டார்கள். இடையில் வந்த இந்த தடை உத்தரவால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதிகள், ’வழக்கு தொடர என்ன தகுதி உங்களுக்கு உள்ளது? என்ன ஆவணங்கள் உள்ளது? எங்கள் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யுங்கள். உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று மறுத்து விட்டனர்.