சென்னை, ஜன.10:ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் இன்று ஒரே நாளில் வெளியானதால் தியேட்டர்கள் திருவிழா போல் காட்சியளித்தன.

தங்கள் அபிமான நட்சத்திரங்களின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேலும் கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படம் இன்று வெளியானது. அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படமும் இன்று ரிலீசானது.

இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நாளில் வெளியானதால் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. இன்று நள்ளிரவு முதல் சிறப்பு காட்சிகள் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. இரண்டு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டர்களில் பிரம்மாண்ட கட்அவுட்டுகளை வைத் திருந்ததால் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா கோலம் பூண்டு களைகட்டி காணப்பட்டது. ஐந்து அடி முதல் 40 அடி உயரமான பிரம்மாண்டமான கட்அவுட்களை ரசிகர்கள் வைத்திருந்தனர். பேட்ட படத்திற்காக திருநெல்வேலியில் உள்ள ஒரு தியேட்டரில் தலைமைச் செயலகம் போன்று வடிவமைக்கப்பட்ட கட்அவுட் அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, திருநெல்வெலி என அனைத்து மாவட்டங்களிலும் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியானதால் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை காசி திரையரங்கில் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியே வந்த அனிருத்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு அற்புதமான இசையை ரஜினி படத்துக்கு வழங்கியதாக பாராட்டு தெரிவித்தனர். அதே போல பரங்கிமலை ஜோதி தியேட்டரில் பேட்ட படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து கார்த்திக் சுப்புராஜ் கண்டு களித்தார் படம் முடிந்த பின்னர் இயக்குனருக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன், தங்கள் அபிமான தலைவரை மீண்டும் இளமையாகவும், ஸ்டைலாகவும் காட்டியதற்காக நன்றி தெரிவித்தனர்.

மதுரையில் ஏராளமான தியேட்டர்களில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகி உள்ளன. தங்கள் ஆஸ்தான கதாநாயகனின் திரைப்படத்தை கொண்டாடும் நோக்கில் தாரை, தப்பாட்டம் ஆட போலீஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் சிறு வாக்குவாதம் நடைபெற்றது பின்னர் லேசான கொண்டாட்டத்துடன் தியேட்டருக்குள் ரசிகர்கள்
சென்றனர்.