கிருஷ்ணா நதி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

இந்தியா

ஐதராபாத், ஜன.10:ஆந்திராவில் கண்டலேறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் ஒப்பந்தப்படி இந்த ஆண்டு சென்னைக்கு கிருஷ்ணா நீர் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மாற்று ஏற்பாடு துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.

தெலுங்கு-கங்கை குடிநீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு ஆண்டுக்கு 15 டிஎம்சி குடிநீர் வழங்க வேண்டும். இதுவரை 1.6 டிஎம்சி தண்ணீரே கிடைத்துள்ளது.

தற்போது கண்டலேறு அணையின் நீர்மட்டம் அடிமட்டத்திற்கு போய் விட்டதால் இந்த ஆண்டு 5 டிஎம்சி தண்ணீருக்கும் குறைவாகவே சென்னைக்கு திறந்துவிட வாய்ப்பு இருப்பதாக ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னையின் 4 குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் கிருஷ்ணா தண்ணீரை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக மாநில பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அரசின் பிரதிநிதிகள் கூறுகையில், தெலுங்கு – கங்கை ஒப்பந்தப்படி சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. எனவே நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றனர்.
தெலுங்கானா மாநில தலைமைப் பொறியாளர் சி.முரளிதரன் கூறுகை யில், ஸ்ரீசைலம் மற்றும் சோமசீலாவில் இருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டால் நீர் ஆவியாவதை தடுக்க முடியும் என்று யோசனை கூறினார்.

கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய தலைவர் ஆர்.கே.ஜெயின் கூறுகையில், கிருஷ்ணா நதிக்கு நீர் வரத்தை கணக்கீடு செய்து சென் னைக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டத்தை வகுப்போம் என்றார்.

மகாராஷ்டிரா மாநில தலைமை பொறியாளர் முண்டே கூறுகையில், கிருஷ்ணா நதியில் சென்னைக்கு உரிய பங்கை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை யின் குடிநீர் தேவைக்காக ஆண்டுக்கு 12 டிஎம்சி தேவைப்படுகிறது. இந்த அளவுக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைப் பதில்லை என்பதால் காவிரி நதிநீரை வைத்து சமாளிக்கிறோம் என்றனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கிருஷ்ணா நதிநீரை திறப்பது அவசியம் என்றனர். இந்த கூட்டத்தை கர்நாடக மாநிலம் புறக்கணித்துவிட்டது.

கிருஷ்ணா நதிநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.