ஆசியக்கோப்பை கால்பந்து: இந்தியா – யு.ஏ.இ. இன்று மோதல்

விளையாட்டு

அபுதாபி, ஜன.10: இன்றைய ஆசியக்கோப்பை லீக் ஆட்டத்தில், போட்டி நடத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

17-வது ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவருகிறது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசியக்கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

இந்த நிலையில், இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா-யுஏஇ அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் 2 கோல்கள் அடித்து அசத்திய கேப்டன் சுனில் செத்ரிதான் அணிக்கு நம்பிக்கை நங்கூரம். தலா ஒரு கோலடித்த ஜீஜே, அனிருத் தபா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால், இன்றைய போட்டியிலும் இந்தியாவிற்கு வெற்றி நிச்சயம். இப்போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ரவுண்டு 16 சுற்றுக்கான இடத்தை உறுதி செய்யலாம்.

தோல்வி அல்லது டிரா கண்டால், பக்ரைனுக்கு எதிரான அடுத்த போட்டியில் வென்றாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிடும். பிபா உலக தரவரிசையில் 97-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 79-வது இடத்தில் உள்ள யுஏஇ அணி இடையே இதுவரை 13 முறை போட்டி நடந்துள்ளது. இதில், 2 முறை இந்தியாவும், 8 முறை யுஏஇ-யும் வெற்றிகண்டுள்ளன. மற்ற 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.