புதுடெல்லி, ஜன.10: அணியில் முன்னேற்றம் இல்லை என்று கூறி, இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங், அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த மே மாதம் பொறுப்பேற்ற ஹரேந்திர சிங் பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய அளவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்ற புகார் எழுந்தது.

இதனையடுத்து, ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தி, பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்தனர்.

இந்த முடிவை தற்போது அமல்படுத்தியதுடன், அவர் ஏற்கனவே இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக சிறப்பாக பணியாற்றியதால் மறுபடியும் அந்த பொறுப்புக்கே திரும்பும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சீனியர் ஹாக்கி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.