எதிர்க்கட்சிகள் மீது எடப்பாடி குற்றச்சாட்டு

அரசியல்

சென்னை, ஜன.10:சென்னை தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,
சுற்றுலா துறை தனது சாதனைக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

இதனை பாராட்ட மனமில்லாமல் வேண்டுமென்றே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

சென்னை தீவுத்திடலில் 45-வது சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:-

இந்த ஆண்டு பொருட்காட்சியின் கருப்பொருள் சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மயமாற்றம் என்பதாகும். 28 மாநிலஅரசு துறைகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டதனியார் அரங்குகள், மத்திய அரசின் அரங்குகள், பிற மாநில அரசுகளின் அரங்குகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகள் வருகைக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. 2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை பல்வேறு வளர்ச்சிகளை பெற்று பல விருதுகளை பெற்றுள்ளது.

இது போன்ற சாதனைகளை பாராட்டாமல் சிலர் அரசை பற்றி வேண்டுமென்றே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த கற்பனை குற்றச்சாட்டுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், இந்த பொருட்காட்சி தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்வதற்கும் பெரிதும் உதவும் என்றார்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வா வர்மா வரவேற்று பேசினார். சுற்றுலா ஆணையர் பழனிகுமார் நன்றி கூறினார். 70 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.35, சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். தினமும் பிற்பகல் 3.00 மணி முதல், இரவு 10.00 வரையிலும்,விடுமுறை நாட்களில் காலை 10.00 முதலும் நடைபெறும்.