திருச்சி,ஜன. 10:உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன் என்று அதிமுக மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்து தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கிராமம் தான் உயிர் நாடி. அப்படிப் பட்ட கிராமத்திற்கு வந்திருக்கிறோம். நமது தலைவர் கருணாநிதி இல்லாத குறையை யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது.இன்றைக்கு தமிழகத்தில் கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் ஆட்சியும், மத்தியில் பாசிச-நாசிச ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிராம சபைக்கு பஞ்சாயத்து ராஜ் என்று பெயர். இப்போது இருக்கும் இந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு “கரப்ஷன் ராஜ்-கமிஷன் ராஜ் என்று சொல்லலாம். மோடி ஆட்சிக்கு “பாசிச ராஜ் என்றும் “நாசிச ராஜ்’என்றும் சொல்லலாம். இந்த கொடுமை நிலையை மாற்ற “மக்கள் ராஜ் அது தான் “பஞ்சாயத்து ராஜ் வேண்டும்.

தேர்தல் வருகிறதோ இல்லையோ, உங்களைத் தேடி இன்றைக்கு நாங்கள் உங்கள் குறைகளை கேட்க வந்தி ருக்கிறோம். இதேபோல், நமக்கு நாமே பயணத்திலும் பலதரப்பட்ட மக்களை சந்தித்தோம். அதன் பலனாய் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக சட்ட மன்றத்திலே அமர்ந்தோம். பலர் தி.மு.க. தான் இன்றும் ஆளுங் கட்சியாக இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் திமுக துணை நிற்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் அதில் திமுக வெற்றிபெற நீங்கள் எல்லாம் உழைப்பீர்கள் என நம்புகிறேன்.

தோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு மறுக்கிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் தான் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த கூட்டம் நடத்தப் படுகிறது. மக்கள் பிரச்சனைகளை தைரியமாக எடுத்துக் கூறுங்கள் என்றார்.