சென்னை, ஜன.11: பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீதான தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரும் அப்பீல் மனுவில் பிற்பகல் தீர்ப்பு கூறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளச் சாராயம் விற்கப்பட்டதற்கு எதிராக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜி. மங்களம் கிராமத்தில் கடந்த 1998 ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, அரசு பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை, கிருஷ்ணகிரி மாவட்ட செசன்ஸ் கோர்ட் விசாரித்து வந்தது. பின்னர், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி, அமைச்சராக இருந்ததால், சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி பாலகிருஷ்ணா ரெட்டி தாக்கல் செய்த மனு, நீதிபதி பார்த்திபன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், காவல்துறை சார்பில் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு :-

மனுதாரர் தரப்பு:- ஒரு சாட்சிதான் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளது. நேரிடை குற்றச்சாட்டுகள் எதுவும் மனுதாரருக்கு எதிராக கிடையாது. தீர்ப்பு வந்தவுடனே, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆகவே, அவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்.

நீதிபதி:- தீர்ப்பை நிறுத்தி வைக்கத்தான் சொல்வார்கள். ஏன் தடை விதிக்க வேண்டும் என்கிறீர்கள்? அரசியல் கட்சி தலைவராக உள்ள நிலையில், வழக்கை எடுத்து செல்வதில் முன்மாதியாக இருக்க வேண்டும். தண்டனையை நிறுத்தி வைக்க சொன்னால் சரி. ஆனால் தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும்.

மனுதாரர் தரப்பு :- இவ்வழக்கில், மனுதாரர் 72 வது குற்றம் சாட்டப்பட்டவர். அவருக்கு எதிராக நேரடி குற்றச்சாட்ட எதுவுமில்லை. காவலர் அளித்த புகாரின் பேரில் மனுதாரர் மீது வழக்கு பதியப்பட்டது. பாகலூர் காவல் நிலைய காவலர் சாட்சியம் அளித்துள்ளார். போலீசை திட்டியதால் ஆய்வாளர் அறிவுறுத்தலின் பேரில் மனுதாரர் மீது வழக்கு போடப்பட்டது. கோவிந்தரெட்டி சாராயம் விற்பதாக ஏற்கனவே புகார் உள்ளதாக காவலர் சாட்சியம் கூறியுள்ளார். மனுதாரர் பெயரை 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை.

நீதிபதி:- தகுதியிழப்பு ஆவீர்கள் என்பதால் நேரடியாக தீர்ப்பை தடை செய்ய சொல்கிறீர்களா?

மனுதாரர் தரப்பு:- 108 பேர் குற்றம் சாட்டப்பட்டு 16 பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கஸ்டம்ஸ் அதிகாரி தொடர்பான மாஷி வழக்கு, ஏ. சுப்ரமணியம் என்பவருக்கு எதிரான ஊழல் தடுப்பு வழக்கு, சித்து வழக்கு ஆகியவற்றில் அப்பீல் வழக்கு முடியும் வரை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் :-காவலர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கூட்டமாக பண்ணினார்கள். ரெட்டியின் மீது குறிப்பாக குற்றச்சாட்டு இல்லை.

நீதிபதி:- அப்படியெனில் தீர்ப்பு தவறு என சொல்ல வருகிறீர்களா?

அரசு வழக்கறிஞர்:- இல்லை. எப்.ஐ.ஆர்.-ல் உள்ளதை சொன்னேன்.

நீதிபதி:- காவல் துறை விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்வீர்களா? தண்டனை தடை தொடர்பான கோரிக்கையில் தடை விதிக்கலாமா? வேண்டாமா? என அரசு தரப்பு விளக்கத்தை கொடுங்கள். காவல் துறையைத்தான் நீங்கள் காக்க வேண்டும். வேறு யாருக்காகவும் மாறக் கூடாது.

மனுதாரர் தரப்பு:- தீர்ப்பு வந்தவுடனே, ஆளுனரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டோம். எனவே எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். வாகனத்தை தாக்கியது, எரித்தது என எதுவும் மனுதாரர் மீது இல்லை. 20 ஆண்டு பழைய வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி:- இதுபோன்ற வழக்குகள் பொதுவாகவே ஏதாவது காரணத்தால் தாமதாகும். அவற்றை ஒரு நிலைப்பாடாக எடுக்க முடியாது.

மனுதாரர் தரப்பு:- எரிப்பு, தாக்குதலில் ஈடுபடாமல் வேடிக்கை பார்த்தவரை தண்டிப்பது எவ்விதத்தில் நியாயம்?

இவ்வாறு வாதம் நடைபெற்றது. இதையடுத்து, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற இடைக்கால மனு மீது பிற்பகலில் தீர்ப்பு வழங்குவதாக கூறி, வழக்கை நீதிபதி வி. பார்த்திபன் தள்ளி வைத்துள்ளார்.