சென்னை, ஜன.11:தமிழகத்தில் நன்மை செய்யக்கூடிய கட்சிக்கு மட்டுமே மத்தியில் ஆதரவு அளிப்போம். தமிழகத்திற்கு துரோகம் செய்பவர்களை யாராக இருந்தாலும் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம்.

இதுவே எங்களது நிலைப்பாடு என தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராயப்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நல்வாழ்வு மண்டபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1400 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பல்வேறு கட்சியை சேர்ந்த 1400 பேர் இன்று அந்த கட்சிகளிலில் இருந்து விலகி இன்று அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டீர்கள். உங்களை நான் உளமாற வரவேற்கிறேன்.
இன்று மக்கள் பிரச்சனை தீர்க்கக்கூடிய ஒரே கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது. திமுகவை பொறுத்தவரை கருணாநிதியை தொடர்ந்து அவரது மகன் ஸ்டாலின் அதற்கு பின்னால் உதயநிதி என குடும்ப உறுப்பினர்களே கட்சி பதவியை வகிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதே போன்று கருணாநிதியின் மகள் கனிமொழி, தயாநிதிமாறன், அழகிரி என பலரும் பல பதவிகளை திமுகவில் வகித்தனர். ஆக மொத்தம் குடும்ப உறுப்பினர்களையே திமுகவை பொறுத்தவரை பதவி பெறும் நிலை உள்ளது.

ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர்பதவி அடையக்கூடிய நிலை உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆளும் கட்சிகள் இருந்தாலும் கூட மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. தைப்பொங்கலை கொண்டாட இருக்கும் இந்த நேரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அம்மாவின் அரசு பொங்கல் பரிசை வழங்கி உள்ளது. அதே போல எம்ஜிஆர் கொண்டு வந்த விலையில்லா வேட்டி-சேலையையும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இன்றைய தினம் ஊராட்சி சபை கூட்டம் எனும் பயணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி உள்ளார். இவர் ஏற்கனவே உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், எம்எல்ஏ என பல பதவிகளை வகித்தவர். அப்போதெல்லாம் கிராமங்களுக்கு செல்லாமல் இப்போது கிராமசபை கூட்டம் எனும் பெயரில் இரட்டை வேடத்தை ஸ்டாலின் போட்டு வருகிறார்.

இதையெல்லாம் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். மக்களை ஏதாவது கூறி திசை திருப்பி குழப்ப வேண்டும் என இதுபோன்ற செயல்களில் திமுக ஈடுபட்டு வருகிறது. இப்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிகளை கூவி கூவி கூட்டணிக்காக அழைத்து வருகிறார்கள்.

ஆனால் எங்களை பொருத்தவரை தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்பவர்களை மட்டுமே மத்தியில் ஆதரிப்போம். அதே வேளையில் தமிழகத்திற்கு துரோகம் செய்பவர்களை ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம் என நிலைபாடுடன் உள்ளோம்.இன்று ஆட்சியையும், கட்சியையும் எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் வழி நடத்தி வருகிறோம்.

அந்தவகையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து கட்சியில் இணைந்த உங்களை வரவேற்பதோடு உங்களுக்கு கட்சியும், ஆட்சியும் துணையாக நிற்கும். அதே போன்று உங்களது பிரச்சனைகளையும் தீர்க்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.