தேனி மாவட்டம், கொடுவார்பட்டி கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி வருகிறார் அஜித் (தூக்குத்துரை). பெரிய குடும்பத்துடன் ஊர் முழுக்க சொந்த பந்தங்களுடன் சொகுசாக அடாவடித்தனம் செய்தபடி வாழ்ந்து வருகிறார். மும்பையில் டாக்டர் படிப்பை முடித்து விட்டு அந்த கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்துவதற்காக நயன்தாரா (நிரஞ்சனா) வருகிறார். அப்போது ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் அஜித் அவர்கள் வந்த வாகனத்தை உடைத்து விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் நயன்தாரா அஜித் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். ஊர்மக்கள் எதிர்ப்பையும் மீறி தைரியமாக புகார் கொடுத்த நயன்தாராவின் குணம் அஜித்தை கவருகிறது.

பின்னர் அந்த புகாரை வாபஸ் பெற்று அஜித்தை வெளியே எடுக்கிறார். அதன்பின்னர் அஜித் செய்யும் காரியங்களும், அவரின் பெரிய குடும்பத்தாரின் அன்பும் நயன்தாராவுக்கு பிடித்து விடுகிறது. இவர்கள் சண்டை மோதலில் தொடங்கி, காதலில் முடிகிறது. இரு வீட்டார் சம்மதத்துடன் நயன்தாராவை அஜித் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தையிடம் பாசம் காட்டும் அஜித் எங்கு சென்றாலும் அவளை அழைத்து செல்கிறார். இந்நிலையில், ஒரு பிரச்சனையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு குழந்தையுடன் நயன்தாரா மும்பைக்கு சென்று விடுகிறார். எதற்காக நயன்தாரா அஜித்தை பிரிகிறார்? தந்தைக்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்தில் என்ன நடக்கிறது? அஜித், நயன்தாரா இணைந்தார்களா என்பதே படத்தின் மீதி கதை.

அஜித்தையும், அழகையும் பிரித்து பார்க்க முடியாது. இந்த படத்தில் நரைத்த தலைமுடி, தாடி மீசையுடன் நடுத்தர வயது தந்தையாக நடித்திருந்தாலும் திரையில் கூடுதல் அழகாகவே தெரிகிறார். டை அடித்துக்கொண்டு சிறு வயது கதாபாத்திரத்திலும் ஜொலிக்கிறார் அஜித். ஒவ்வொரு படத்திலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறார். முதல் பாதியில் பொறுப்பில்லாமல், சண்டித்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் கிராமத்து தூக்குத்துரையாகவே வாழ்ந்துள்ளார். 2-ம் பாதியில் மகளை பிரிந்த தந்தை மனம் என்ன பாடுபடும் என்பதை தன் கண் அசைவினாலும், உடல் மொழியாலும் உணர வைத்து விடுகிறார். படத்தில் ஆங்காங்கே சிறு சறுக்கல்கள், தேவையற்ற காட்சிகள் இருந்தாலும் அஜித்தையும், நயன்தாராவையும் திரையில் குளோசப்பாக காட்டும் போது அவை அத்தனையும் மறந்து விடுகிறது. தனது ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் அடிச்சி தூக்கு பாட்டிற்கு ஆட்டம் போட்டுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏற்றார்போல் நயன்தாராவிற்கு வயதாக வயதாக இளமைக் கூடிக்கொண்டே போகிறது. புடவையில் நயன்தாரா வரும் காட்சிகளில் கொள்ளை அழகாக தெரிகிறார். இவர்கள் இருவரும் திரையை பங்குபோட்டுக்கொள்ளும் காட்சிகள் மனதை வருடுகிறது. ஒரு குழந்தைக்கு தாயாக அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

தொடர்ந்து அஜித்துடன் பயணித்து வரும் இயக்குனர் சிவா கடந்த படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடித்து விட்டார். ஏற்கனவே இவர்கள் காம்பினேஷனில் வீரம் படத்தில் அண்ணன், தம்பி செண்ட்டிமென்ட், விவேகம் படத்தில் அண்ணன்-தங்கை செண்ட்டிமென்ட் சூப்பர் ஹிட்டானதால் இந்த படத்தில் தந்தை-மகள் செண்ட்டிமென்டை கையில் எடுத்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் சிவா.

காமெடியில் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர், விவேக், கோவைசரளா கைகொடுத்துள்ளனர். ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனேகா இதிலும் அஜித்தின் மகளாக நடித்துள்ளார். தந்தை-மகள் பாசப்போராட்டத்தில் இருவரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள ஜெகபதிபாபு மிரட்டியுள்ளார்.

அஜித் படத்திற்கு முதல்முறையாக இசையமைத்துள்ள டி.இமானுக்கு இந்த படத்தில் வேலை அதிகம். அற்புதமான 6 பாடல்களை கொடுத்துள்ளார். அதிலும் கண்ணாண கண்ணே பாடல் நெஞ்சை வருடுகிறது. அடிச்சி தூக்கு பாடல் ஆட வைக்கிறது. அதேபோல் பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்துள்ளார் இமான். வெற்றியின் ஒளிப்பதிவில் தேனி மாவட்டமும், மும்பையும் அழகாக
தெரிகிறது.

பாசப்பிணைப்பை விவரிக்கும் விஸ்வாசம்

-கே.விஜய் ஆனந்த்