பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த இரண்டே நாட்களில் இந்த மசோதாவை சட்டமாக்கி மோடி அரசு சாதனை படைத்துள்ளது.
உயர் ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முடிவு முதன் முதலில் தமிழகத்தில் எம்ஜிஆரால் எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அது கைவிடப்பட்டது. பின்னர், பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது இந்த இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அப்போது இருந்த சூழலில் உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்துவிட்டது.

தற்போது, மோடி அரசு, தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் இந்த மசோதாவை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றி உள்ளது. இது தேர்தல் நேர ஸ்டண்ட் என்று விமர்சித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இயலவில்லை. வேறு வழியின்றி மசோதாவை ஆதரிக்க வேண்டியதாயிற்று.
திமுக, அதிமுக போன்ற வெகு சில கட்சிகள் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் அதிமுக, மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டது. திமுக மட்டும் தனது எதிர்ப்பை வாக்களிப்பில் காட்டியது.

இந்த மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை மோடி அரசு அடித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் சரியல்ல என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த போதிலும், மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

இந்த மசோதாவை எதிர்த்தால், வட மாநிலங்களில் மிக அதிகமாக உள்ள உயர் ஜாதியினரின் வாக்கு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் மசோதாவை எதிர்க்க இயலாமல் போனது.

இடஒதுக்கீடு உச்சவரம்பை 50 சதவீதமாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிர்ணயித்துள்ள போதிலும் இது சட்டப் போராட்டத்திலும் வென்றுவிடுமென அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.