தென் சீன கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா தொடர்ந்து அண்டை நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இப்போது போருக்கான ஆயத்த நிலையை மேற்கொள்ளுங்கள் என்று சீன ராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் ஸி ஜின்பிங் கட்டளையிட்டுள்ளார். இது தென் சீன கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைக்குரிய தென் சீன கடல், கிழக்கு சீன கடல் பகுதிகள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாகவே சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. குறிப்பாக தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுடையதுதான் என சீனா கூறி வருகிறது. ஆனால் அந்த பகுதி தங்களுக்கு சொந்தமென சீனாவின் அண்டை நாடுளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தைவான் ஆகிய நாடுகளும் கூறி வருகின்றன.

இந்த நாடுகள் அனைத்தும் சீனாவை விட வலிமையில் மிகவும் குறைவான நாடுகளாக இருப்பதால் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் குறியாக இருக்கிறது. தென் சீன கடல் பகுதி என்பது முக்கிய கடல் வழிப்பாதையாக திகழ்கிறது. அத்துடன் அந்த பகுதியில் எரிசக்தி வளங்களும், மீன் வளமும் அபரிமிதமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதிக்கு அந்த நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.

சீனா ஒரு படி மேலே போய் அந்த கடல் பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி அதில் ராணுவ நிலைகளை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க தென் சீன கடல் பகுதி சர்வதேச பகுதி எனவும், அங்கு பல நாடுகளின் கப்பல்களும் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. ஏனெனில், அந்த பகுதி வழியாகத்தான் அமெரிக்க கப்பல்களும் சென்று வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்குவரத்து நிலவி வருகிறது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட வர்த்தக போருக்கும் இது ஒரு அடிப்படை காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, தென் சீன கடல் பகுதிக்கு ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் தான் போருக்கான ஆயத்த நிலையை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு சீன அதிபர் உத்தரவிட்டள்ளார். இது பெரும் அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட போரை நடத்தவும் சீனா முடிவு எடுத்து இருப்பதால் அப்பகுதியில் ஒரு விதமான பதற்றம் ஏற்பட்டுள்ளது.