சென்னை, ஜன.12: ஹாங்காங்கிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நூதன முறையில் 24 கிலோ தங்கம் கடத்தி வந்த இரண்டு இளம்பெண்களை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள தலா 12 கிலோ தங்ககட்டியை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் கடத்தி வந்ததும் இதில் சென்னையில் உள்ள முக்கிய புள்ளிக்கு தொடர்பு ள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தென் கொரியாவிலிருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் ஹாங்காங்கிலிருந்து கதே பசிபிக் விமானம் சென்னை வந்தது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

தென்கொரியா நாட்டைச் சேர்ந்த யங்யங்கிம் (வயது 26), ஹான்புஜன் (வயது 26) ஆகியோர் டிப்டாப் உடையில் வந்தனர். அப்போது சோதனை செய்யும் சமிக்ஞை செய்யும் கருவிகள் இயங்காததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. மேலும் இந்த இரண்டு பெண்களும் ஒன்றும் தெரியாதது போல் சென்றனர்.

இதில் உஷாரான சுங்கத்துறை அதிகாரிகள் இரு பெண்களையும் அழைத்து சென்று நடத்திய சோதனையில் அவர்கள் உள்ளாடைக்குள் நூதனமுறையில் தலா 12 கிலோ என 24 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் தங்கம் கடத்தி வந்ததும், சென்னையில் உள்ள மிக முக்கிய புள்ளிகளின் உதவியுடனும் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

போலீசார் அவர்களிடமிருந்து 24 கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 8 கோடியாகும். சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் பிடிபட்டது இதுவே முதல் முறையாகும்.

இளம்பெண்கள் மூலம் தங்கம் கொடுத்து அனுப்பியது யார்? சென்னையில் அவற்றை பெற்றுக்கொள்ளும் முக்கிய புள்ளி யார்? இந்த தங்கம் கடத்தலுக்கும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.