சென்னை, ஜன.12:  சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் வரும் 21-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன், 4 கி.மீ. சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 381 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன், அதன் அருகாமையில் உள்ள அங்கன்வாடிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கி சிறுவர், சிறுமியரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடிகள் இணைக்கப்பட்ட பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 21-ந் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கி வைக்க உள்ளார்.