சிட்னி, ஜன.12: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 289 ரன்கள் இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷிகர் தவாண், அம்பத்தி ராயுடு டக் அவுட் ஆகியும், கேப்டன் கோலி 3 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடிவருகிறது. சிட்னியில் இன்று தொடங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்த நிலையிலும், கேரே 24 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். அதன்பின்னர், மார்ஸ்-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பின்னர், கவாஜா 59 ரன்களிலும், மார்ஸ் 70 ரன்களிலும் அவுட் ஆக, அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டாயின்ஸ் பொறுப்புடன் விளையாடினர். ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களில் வெளியேற, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. ஸ்டாயின்ஸ் (47), மேக்ஸ்வெல்(11) ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவாண் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக, பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி (3), அம்பதி ராயுடு (0) அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர்.
இதனால், 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திகைத்து நின்றது. பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் (40) – தோனி (24), பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திவருகின்றனர். மதியம் 1.30 மணிநேர நிலவரப்படி, இந்திய அணி 22 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்துள்ளது.