சென்னை, ஜன.12: கொடநாடு சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லாத என் மீது பொய் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பதாகவும், விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொள்ளை முயற்சி மற்றும் படுகொலை குறித்து டெல்லியில் டெகல்ஹா இணைய பத்திரிகை முன்னாள் ஆசிரியர் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு பேட்டி அளித்தார்.

அதில் இச் சம்பவத்துடன் முதலமைச்சரை தொடர்புபடுத்தப்பட்டு இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொடநாடு எஸ்டேட் இல்லத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மறைந்த ஜெயலலிதாவையும், என்னையும் களங்கப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல் எதுவும் உண்மையல்ல. முற்றிலும் பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளிடம் எந்த காலத்திலும் ஜெயலலிதா ஆவணங்களை பெற்றதில்லை. பதவிகள் வழங்கியே அழகு பார்த்து உள்ளார்.

அவருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த திமுக தடையாக இருக்கிறது. பொங்கல் பரிசு வழங்குவதை எதிர்த்து தனது கட்சிகாரரை பயன்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். மாநிலத்திற்கு எந்த தொழிலும் வரவில்லை என குறை கூறுகிறார்கள். ஆனால் தொழில் முதலீட்டிற்காக ஜனவரி 23, 24-ல் நடைபெற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தடை கேட்டு வழக்கு போடுகிறார்கள். இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதை அவர்களால் சகித்து கொள்ள முடியவில்லை.

இப்போது டெல்லியில் ஒரு வீடியோவை வெளியிட்டு களங்கம் கற்பிக்க முயற்சி செய்து உள்ளார்கள். இதில் துளியும் உண்மையில்லை என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு தொடரப்படும். விசாரணையில் இந்த பொய் செய்திக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார் என்பது தெரியவரும்.  ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே கொடநாடு பங்களாவுக்கு சென்றதாக கூறுகிறார்கள். இதற்கு துளியும் ஆதாரமில்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கொடநாடு சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 22 முறை ஆஜராகி உள்ளனர். அப்போதெல்லாம் கூறாதவை இப்போது சொல்வது ஏன்? இதிலிருந்தே இதில் சதி அடங்கியிருக்கிறது என்பது தெரிகிறது. பிப்ரவரி 2-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கை நீர்த்துபோக செய்வதற்கு இப்படி செய்கிறார்களா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த காலத்தில் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சிதுறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் தனது பதவிக்காலத்தில் கிராமங்களுக்கு சென்று அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை.

இப்போது கிராம சபை என்ற பெயரில் கிராமங்களுக்கு சென்று கொண்டு இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் தேர்தல் வருகிறது என்பதுதான். நானும், துணை முதலமைச்சரும் எங்கள் தொகுதிகளுக்கு சென்று அனைத்து பகுதிகளிலும் எல்லா வசதிகளையும் செய்து இருக்கிறோம். 2 உதவி கலெக்டர்களை நியமித்து மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறோம். ஆனால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் ஆட்சி மீது ஏதாவது புகார் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு திராணியும், முதுகெலும்பும் அற்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.