லக்னோ, ஜன. 12: மக்களவை தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று மாயாவதி இன்று அறிவித்தார். அமேதி மற்றும் ரேபரேலியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்து இருப்பதாகவும், ஆனால் கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். பிஜேபிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தனியாக கூட்டணி அமைத்துள்ளன.
இது குறித்து இன்று லக்னோவில் மாயாவதியும், அகிலேசும் கூட்டாக பேட்டியளித்தனர்.

மாயாவதி கூறுகையில் எங்கள் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்ற போதிலும் அமேதி மற்றும் ரேபரேலியை விட்டுக்கொடுத்து இருக்கிறோம் என்றார். அவர் மேலும் கூறுகையில், பிஜேபி-காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே கொள்கைகளை கொண்டவை. உதாரணமாக ராணுவ தளவாட கொள்முதலில் நடந்த ஊழலை கூறலாம். காங்கிரஸ் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தது. மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது. எங்கள் கூட்டணி பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பும் என்றார்.

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் 1993-ல் அயோத்தி இயக்கத்தை ஒன்று சேர்ந்து பிஜேபிக்கு எதிராக நடத்தியது. இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி அமைத்துள்ளன.