சென்னை, ஜன.12: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், மெகா விடுமுறை இன்று தொடங்கியது.  குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கானோர்
சென்றதால் சென்னை நகரம் வெறிச் சோடி காணப்படுகிறது.  பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக 3 நாட்கள் அரசு விடுமுறை விடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் 15,16,17 ஆகிய 3 தினங்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

இடையில் 14-ம் தேதி திங்கட்கிழமை போகிப் பண்டிகையன்று பணி நாளாக இருந்தது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில் 14-ம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் நாளை முதல் 6 நாட்களுக்கு இயங்காது. 18-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மொத்தம் 9 நாட்கள் மெகா விடுமுறை நாளாக அனுபவிக்க முடியும்.

பொங்கலை முன்னிட்டு  சென்னையில் இருந்து  சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையைப் போன்றே பிற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்காக 14ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இந்நிலையில், கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில்நிலையம் அருகே உள்ள நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையங்களில் இருந்து
சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது.

17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை  சென்னை திரும்ப 3 ஆயிரத்து 776 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 பேருந்துகள் பொங்கலுக்காக இயக்கப் படுகின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கான தனியார் பேருந்துகளும் வெளியூர்களுக்கு பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. இவற்றில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நீண்ட விடுமுறையை பயன் படுத்தி குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் பெரும்பாலானோர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் செல்ல இருப்பதால் தலைநகரம் வெறிச் சோடி காணப்பட்டது. இந்த ஆண்டு 9 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.