சென்னை, ஜன.12: தமிழக வசூல் சாதனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, அல்டிமேட் அஜித்குமார் பின்னுக்கு தள்ளி உள்ளார். இருப்பினும் உலக மார்க்கெட்டிலும், சென்னை பாக்ஸ் ஆபீசிலும் ரஜினியே முன்னிலை வகிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான பேட்ட படம் தமிழகத்தில் பல திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். பழைய கதையாக இருந்தாலும் இதில் ரஜினி தனக்கே உரித்தான உடல் மொழி, நகைச்சுவை, ஆக்ஷன் என பின்னி எடுத்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் முதல் நாளில் 170 ஷோக்கள் ஓடின. அனைத்து திரை அரங்குகளிலும் கிட்டத்தட்ட ஹவுஸ் புல்தான். பேட்ட சென்னை பாக்ஸ் ஆபீசில் ரூ.1.12 கோடி வசூலை எட்டியது. தமிழகம் முழுவதும் 11.5 கோடி வசூலை குவித்தது.  அதேபோல் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சென்னையை தவிர்த்து பிற ஏரியாக்களில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. முதல் நாளில்  சென்னையில் ரூ.88 லட்சத்தை வசூல் செய்தது. தமிழகம் முழுவதும் ரூ. 16.5 கோடி வசூல் செய்து விஸ்வாசம் படம் சாதனை படைத்தது. இதன் மூலம் தமிழக வசூலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனையை அல்டிமேட் ஸ்டார் அஜித் முறியடித்து முன்னேறி உள்ளார். இருப்பினும்
சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரஜினியின் கோட்டையாக விளங்குகிறது. உலக மார்க்கெட்டிலும் ரஜினிக்கு தான் வசூல் அதிகம்.

இந்நிலையில், 2-ம் நாள் கலெக்ஷன் விவரங்கள் வெளியாகி உள்ளன. ரஜினியின் பேட்ட இரண்டு நாளில் உலகம் முழுவதும் ரூ.43 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் ரூ.26 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அதேபோல் விஸ்வாசம் படம் உலக அளவில் ரூ.35 கோடி வசூல் செய்ததாகவும். தமிழகத்தில் ரூ.29 கோடி வசூலை குவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிவி மற்றும் இணையதள விளம்பரங்கள் இல்லாமல் விஸ்வாசம் இவ்வளவு வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.