சென்னை, ஜன.13: கொடநாடு விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூ கொடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. அவர் எழுப்பிய பல கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்காமல், வழக்கு விசாரணையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

திமுகவை பொறுத்தவரை முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு வந்த பிறகு, அவர் பதவி விலகுவதுதான் சரியாக இருக்கும். இது பற்றி சிறப்பு விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணை நடைபெற வேண்டும். இது குறித்து கவர்னர், ஜனாதிபதி ஆகியோரிடம் முறையிட உள்ளோம். கவர்னர் தேதி ஒதுக்கியவுடன் அவரை சந்தித்து புகார் அளிக்கப்படும்.

இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்ல திமுக தயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.