சென்னை, ஜன.14: பனி மற்றும் போகி புகைமூட்டம் காரணமாக எதிரில் இருக்கும் மின்கம்பத்தின் மோதியதில் சாப்ட்வேர் நிறுவன அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் அஸ்வின் குமார் (வயது 30). இவர், பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு (எச்.ஆர்.) அதிகாரியாக பணியில் இருந்தார். இந்த நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டிற்கு பைக் மூலம் சென்றுள்ளார்.

அதிகாலை 4.30 மணியளவில் வேளச்சேரி மேம்பாலம் கீழ் உள்ள சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்ற போது, கண்ணை மறைக்கும் புகைமூட்டம் காரணமாக திடீரென நிலைத்தடுமாறி அங்குள்ள மின் கம்பத்தின்மீது மோதியுள்ளார்.
இதில், தலையின் முன்பக்கம் காயமடைந்த அஸ்வினை, பொதுமக்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், வரும் வழியிலேயே அஸ்வின் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், பனிமூட்டம் மற்றும் போகி புகையின் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

உயிரிழந்த அஸ்வின், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மனோகரனின் மகன் என்றும், திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன நிலையில் விபத்து ஏற்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.