சென்னை,ஜன16:பொங்கல் பண்டிகையையொட்டி பல லட்சகணக்கான தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட காரணத்தால், சென்னை நகரின் முக்கிய சாலைகள் வெறிசோடி காணப்பட்டன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை இந்தாண்டு செவ்வாய்கிழமையன்று வந்ததால், திங்கட்கிழமை ஒரு நாள் அரசு விடுமுறை அளித்தால் தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்து வெளியூர் செல்ல முடியும் என பல தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் 14-ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் கடந்த வெள்ளியன்று பெருமபாலான மக்கள் தங்கள் வெளியூர்களுக்கு பஸ்கள் மற்றும் ரயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினார். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் வசதியாக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, இதுவரை 8 லட்சம் பயணிகள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக வெளியூர் சென்றுள்ளனர்.
அதே போன்று ரயில்கள் மூலம் பல லட்சம் சென்னையிலிருந்து வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக எப்போது பரபரப்புடனும், கூட்ட நெரிசலுடனும் காணப்படும் சென்னை மாநகர் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் நேற்றும், இன்றும் வெறிசோடி காணப்படுகிறது.

சென்னை புறநகரில் இருந்து கிண்டி வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணிபுரியம் பகுதிகளுக்கு ரயில் மற்றும் அரசு பஸ் மார்க்கமாக செல்வது வழக்கம், இன்றைய தினம் கிண்டி ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் வழக்கமாக காணப்படும் மக்கள் கூட்டத்தை விட மிகவும் குறைவான மக்களையே காணமுடிந்தது. அதே போன்று கிண்டி மேம்பாலம், வள்ளுவர் கோட்டம், நந்தனம் சிக்னல், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் உள்ள நேற்று போல் இன்றும் வெறிசோடி காணப்பட்டது.

தினமும் லட்சகணக்கான வாகனங்கள் அணிவகுக்கும் சென்னையின் முக்கிய சாலையான அண்ணா மேம்பாலத்தில் இன்று சில வாகனங்களே சென்றத்தால் போக்குவரத்தால் நெரிசல் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய முடிந்தது. அதே போன்று லட்சகணக்கான மக்கள் வந்து செல்லும் திநகர் பேருந்து நிலையம் இன்றும் ஆளில்லாமல் வெறிசோடியே காணப்பட்டது.

அதே போன்று மக்கள் தலைகள் மட்டுமே காணப்படும் திநகர் ரங்கநாதன் தெருவில் இன்றையதினம் சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காலியாக தென்பட்டது. அதே நேரத்தில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மெரீனா கடற்கரை, தீவுத்திடல் பொருட்காட்சி, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களில் தொடர் விடுமுறை காரணமாக குடும்ப குடும்பாக மக்கள் வருகை தந்ததை பார்க்க முடிந்தது.