சேலம், ஜன.16:மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச்சிலைகளு டன் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் எம்ஜிஆர்மற்றும் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு 29.4.2018 அன்று அவர் அடிக்கல் நாட்டினார்.அதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் முழுமைப் பெற்றது. கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக நிறைவுப்பெற்ற நிலையில் இன்று பொது மக்களின் பார்வைக்காக மணி மண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் மணிமண்டபத்தை திறந்து வைத்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் உழைப்பால் தமிழகம் அகில இந்திய அளவில் சமூக பொருளாதார துறையில் வளர்ந்துள்ளது. தமிழகத்தின் நலனுக்காக இரு தலைவர்களும் தங்களையே அர்ப் பணித்துக்கொண்டனர். தமிழக மக்களையே தங்கள் குடும்பத்தினராக இருவரும் நினைத்தனர். அவர்கள் கொண்டு வந்த உயிரோட்டமுள்ள திட்டங்கள் எத்தனை ஆண்டுகளானா லும் அவர்களது பெயர்களை பிரதிபலிக்கும்.

அனைத்து தரப்பு மக்களையும் நிலை உயர்த்திய அவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரு பெரும் தலைவர்களின் வழியில் நடைபோடும் இந்த அரசு, பகைவர்களின் இழிச்சொல்லையும், பழிச்சொல்லையும் தாங்கி பீடு நடை போடுகிறது.
இழிச்சொல்லையும், பழிச்சொல்லை யும் மக்களின் ஆதரவுடன் தகர்த்து எறிவோம். இவ்வாறு அவர் கூறினார்.

எம்ஜிஆர்-ஜெயலலிதா மணிமண்டபம் அமைந்துள்ள சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் சாலை என பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாச்சலம் சக்திவேல், வெற்றிவேல், சித்ரா, சின்னத்தம்பி, மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையர் சதீஷ், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.