சென்னை, ஜன. 16:எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளை உலகெங்கும் அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், எந்தத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், தேர்தல் களத்திலே விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூட வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

இதுகுறித்து இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை, எளிய மக்களின் உயர்வுக் காகவும், உழைப்பால் உலகை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களுக்காகவும் நல் உள்ளத்தோடு பாடுபடுகின்ற உயர்ந்த மனிதர்களை ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பார்க்க முடியும். அவரைப்போல் கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் சாதனைத் திட்டங்கள் பலவற்றைப் படைத்தவர் ஜெயலலிதா.ஜெயலிதாவை போல் விசுவாசத் தொண்டர்களாகிய நாமும் தமிழக மக்களுக்காக நம்மை அர்ப்பணித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த உணர்வோடுதான் இந்தப் பொங்கல் எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக அதிமுக அரசு வழங்கியது.

எம்ஜிஆர் வாரி வாரிக் கொடுத்தவர். ஜெயலலிதா அள்ளி அள்ளிக் கொடுத்தவர். நாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள். அதனால் தான் நாமும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும், கெடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும் அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. யார் தடை போட்டாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழக மக்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் பாடுபடுவோம். எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். நமக்கு அவப் பெயர் உண்டாக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவதூறுச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள். உண்மைக்குப் புறம்பாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம், எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக தான் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். எந்தத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், தேர்தல் களத்திலே விசுவாசத் தொண்டர் களாகிய நாம் வெற்றி வாகை சூடுவோம். அதற்காக அனைவரும் அயராது உழைப்போம்; இதையே புரட்சித் தலைவரின் பிறந்த நாள் சபதமாக எடுப்போம் நினைத்ததை முடிப்போம்.

இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.