எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தயார்:டி.ஜெயக்குமார்

அரசியல் சென்னை

சென்னை, ஜன.16:தமிழகத்தில் 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதனை எதிர்க்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. அதே நேரத்தில், இந்த 20தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றிப்பெறும் என மீனவளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரீனாவில் அமைந்துள்ள திருவள்ளூவர் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் அமைச்சர் டி. ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது சிறப்பான தொரு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் வழி நடத்தி வருகின்றனர். அந்தவகையில், அதிமுக ஆட்சி என்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் அளவிற்கு பல சாதனைகளை புரிந்து வருகிறது.

திருவள்ளுவர் தினமான இன்று அரசின் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.திருக்குறளை பின்பற்றினாலே உலக நாடுகளின் இடையே பகை, போர் என்பது இல்லாமல் அமைதி ஏற்படும். அதேபோன்று திருவள்ளுவர் தினத்தன்று தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடி தமிழக அரசு அவரது குரலுக்கு ஏற்ப மரியாதை அளித்து வருகிறது.

திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் இருந்த மது விலக்கு ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதிலும், தமிழக அரசை பொறுத்த வரை மது விலக்கு என்பது அரசின் கொள்கைளில் ஒன்றாக உள்ளது.

இதில் எந்த மாற்றத்திற்கோ சமரசத்திற்கு இடமில்லை. தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் பணியை அரசுதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மதுவை உடனடியாக தடை செய்தால் கள்ளச்சாராயம், விற்பனைக்கு வழி வகுத்து விடும். திமுக ஆட்சி காலத்தில் மதுக்கடைகள் இருந்தபோதிலும், கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் அதுபோன்ற நிலை எங்குமே இல்லை.

இடைத்தேர்தல் மூலம் ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக கனவு காண்கிறது. தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் வந்தாலும் அதைக்கண்டு அஞ்சாமல் அதை எதிர்க்கொள்ள அதிமுக எப்போதும் தயாராக உள்ளது.அதே நேரத்தில் இந்த 20 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றிப்பெறும்.
ஆனாலும், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக தலைவர் ஸ்டாலின், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவருக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை.

அதிமுக அரசு நீடிக்கவேண்டும் என திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர். அந்த அளவுக்கு அதிமுக ஆட்சி என்பது எதிர் தரப்பினரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.