கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல் பெரும் பங்கு வகித்தது. மேல்மட்டத்தில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மிகப்பெரிய இயக்கத்தை நடத்தினார். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை யோகா குரு பாபா ராம்தேவ் முன்னெடுத்தார். அனைவரும் சேர்ந்து போராடியதின் காரணமாக அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெயருக்கு ஒரு லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால், அது ஊழலை ஒழிக்க போதுமானது அல்ல என்று கூறி ஜன்லோக்பால் அமைப்பை உருவாக்குமாறு அன்னா ஹசாரே அறிவுறுத்தினார்.

இவர்களது பிரச்சாரம் காரணமாக ஊழலுக்கு பெயர்போன ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. அதன் பின்னர் பதவியேற்ற நரேந்திர மோடி அரசு லோக்பால் மசோதாவை கொண்டு வந்தது. ஆனால், சில பல காரணங்களால் கடந்த நான்கரை ஆண்டு காலமாக லோக்பால் அமைப்பை உருவாக்க இயலாமல் தள்ளிக்கொண்டே போனது.
லோக்பாலை அமைப்பது தொடர்பான தேர்வுக்குழு தலைவராக முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளது போதிலும் அந்த குழுவின் உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு இதில் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, லோக்பால் உறுப்பினர்கள் தேர்வுக்குழுவை அமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாததும், பணியாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் தேர்வுக்குழு உறுப்பினர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளது.

வரும் மார்ச் 7-ந் தேதிக்குள் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் வர உள்ள நிலையில் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டாலும் லோக்பால் அமைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

ஊழலை முக்கிய பிரச்சனையாக வைத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, விரைந்து லோக்பாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வேண்டுமென்றே தாமதம் செய்வதாக ஒரு கருத்து பரவக்கூடும். எனவே, இந்த விஷயத்தில் மேலும் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.