தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படம் சுமார் 15 ஆண்டுகளுக்குப்பிறகு 2-ம் பாகமாக உருவாக உள்ளது.

இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த நெடுமுடிவேணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. வெளிநாட்டு நடிகை ஒருவரும் நடிக்க உள்ளார். முதல் முறையாக அனிருத் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர்பிரசாத் எடிட்டிங் செய்கிறார். முத்துராஜ் கலையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அக்ஷய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் அக்சய்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. 9.30 மணி அளவில் பூஜை போடப்பட்டு 10.15 மணி அளவில் முதல் காட்சி படமாக்கப்பட்டது. சேனாபதி கெட்டப்பில் கமல் நடித்த முதல் சீனை இயக்குனர் ஷங்கர் படமாக்கினார். நாளை முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு வேலப்பன்சாவடியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.