சென்னை, ஜன.19: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ள புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளம் இயக்குனர் கார்த்திக்
சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலையொட்டி கடந்த 10-ந் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இது ரஜினிகாந்தின் 163-வது படமாகும். இந்த படத்தை தொடர்ந்து இன்னும் 2 படங்களில் அவர் நடிக்க உள்ளார்.

முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அந்த படத்தின் தலைப்பு நாற்காலி என சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆனால் படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.  இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மூன்று முகம், கொடிபறக்குது, பாண்டியன் ஆகிய படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி போலீசாக நடித்து உள்ளார். 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் போலீசாக நடிக்க இருப்பது ரசிகர்களை
உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் இயக்குனர் வினோத் படத்திலோ அல்லது மீண்டும் கார்த்திக்
சுப்புராஜ் படத்திலோ நடிப்பார் என தெரிகிறது.