கொல்கத்தா, ஜன.19: கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி ஏற்பாட்டில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் 22 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். அனைவரும் பிஜேபியை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று பேசினர். நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பிஜேபியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மம்தா பானர்ஜி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் ஒவ்வொரு கட்சித் தலைவரையும் பேசுவதற்கு அழைத்தார். அனைத்து தலைவர்களும் மக்களவைத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்துவதன் அவசியத்தை விளக்கினார்கள்.

இந்தக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை என்ற போதிலும் கூட்டம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரசேகர ராவ், பிஜு ஜனதாதளம் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
முன்னதாக கொல்கத்தா ஓட்டலில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.