சென்னை, ஜன.19:  சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் முக்கிய கட்டமாக தேனாம்பேட்டை டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை இடையிலான சுரங்க வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன் ஆய்வு செய்தார். திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான போக்குவரத்து அடுத்த ஆண்டு ஜுன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

திஙகள் கிழமை வரை 3 நாள் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், அதனை தொடர்ந்து இம்மாதம் இறுதியில் போக்குவரத்து தொடங்கும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் முதல் திட்டத்தின் கீழ் தற்போது கோயம்பேடு-ஆலந்தூர், சென்ட்ரல்-விமான நிலையம், விமான நிலையம்-டிஎம்எஸ் இடையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
முதல் திட்டத்தின் நிறைவு பணியாக தேனாம்பேட்டை டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை 13 கி.மீட்டர் தொலைவிற்கு 28 மீட்டர் ஆழத்தில் சுரங்க வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. இந்த வழித்தடம் நாட்டிலேயே மிக ஆழமானது என்று கூறப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் ரெயில்  சோதனை ஓட்டம் இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது. இதனை ஆய்வு செய்வதற்காக வெளியில் இருந்து பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். இவர்கள் டிராலி வண்டியில் தண்டவாளத்தில் சென்றும், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தும் ஆய்வு மேற்கொண்டனர். சுரங்க வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொண்டனர்.

மெட்ரோ ரெயிலை மிதமான மற்றும் துரிதமான வேகத்திலும் இயக்கி பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டது. திங்கள் கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் இந்த ஆய்வு நடைபெறும். இதன் பின்னர் மனோகரன் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று அறிக்கை தாக்கல் செய்வர். அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், இம்மாதம் இறுதியில் போக்குவரத்து தொடங்கும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை-டிஎம்எஸ் இடையிலான ரெயில் போக்குவரத்து வட சென்னையை இணைக்கும் வகையில் அண்ணாசாலை, சென்ட்ரல் வழியாக செல்கிறது. ஆயிரம்விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இன்று நடைபெற்ற சோதனை ஓட்டத்திற்கு பிறகு பாதுகாப்பு ஆணையர் மனோகர், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் ஆகியோர் கூறுகையில், டிஎம்எஸ் வண்ணாரப்பேட்டை இடையே 3 பிரிவுகளாக பிரித்து சோதனை ஓட்டம் நடத்துகிறோம்.

ரெயில் நிலையங்களில் காற்றோட்டம், கண்காணிப்பு போன்றவை சீராக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறோம். எங்களது சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு போக்குவரத்து தொடங்கும் என்று கூறினர். பங்கஜ்குமார் பன்சால் கூறுகையில், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ விஸ்தரிப்பு திட்டத்தை 2020 ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.