சென்னை, ஜன.20:பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு சொகுசு வாழ்க்கை மேற்கொண்டது உண்மை தான் என உயர்மட்டக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக கடந்த ஆண்டு சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக ரூ2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும் சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் மீது டிஐஜி ரூபா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிஐஜி ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டார். ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதனை தொடர்ந்து சசிகலா விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, தொடர்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் இந்த குழு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

அந்த அறிக்கையில் சிறைச்சாலை விதிகளை மீறி சசிகலாவுக்கும், இளவரசிக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு அறைக்கு 4 பெண் கைதிகள் இருக்க வேண்டிய சூழலில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கியதால் மற்ற அறைகளில் கூடுதலாக பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சசிகலா இருந்த அறைக்கு திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு, அறைக்குள் பூனைகள் நுழைவதை தடுப்பதற்காகத்தான திரைசீலைகள் போடப்பட்டது என சிறை அதிகாரிகள் பதிலளித்ததாக அறிக்கையில் வினோதமாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல் சமையலுக்கு தேவையான குக்கர் உள்ளிட்ட பொருள்கள் சசிகலா அறையில் இருப்பதாக ரூபா புகார் கூறியிருந்த நிலையில், அது குறித்தும் குழு ஆய்வு நடத்தியது. அப்போது குக்கர் உள்ளிட்ட பொருள்கள் இல்லாத நிலையில், அறையில் சமையலுக்கான மஞ்சள் தூள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறையில் சசிகலாவுக்கு தனியாக சமையல் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சசிகலா, இளவரசி ஆகியோர் கைப்பையுடன் வெளியே சென்று வந்த வீடியோ குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்தியது. அதன்படி அவர்கள் பார்வையாளர்களை சந்தித்தாக கூறி சிறை நிர்வாகம் அளித்த நேரத்திற்கும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான நேரத்திற்கும் வேறுபாடு உள்ளதாக குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கியது தொடர்பான விசாரணையின் போது, நீதிமன்றம் உத்தரவிட்டதாக எண்ணி சலுகைகள் வழங்கியதாக சிறைத்துறையினர் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை வளாகத்தில் சொந்த உடை அணிய சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.