சென்னை, ஜன20:சென்னை விமான நிலையத்தில் மருத்துவ மாணவியை காதலன் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ஜாவில் 4-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த மாணவி விடுமுறையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவருடன் சார்ஜாவில் மருத்துவப்படிப்பு 2-ம் ஆண்டு படிக்கும் அவரது தம்பியும் வந்தார். அவர்கள் மதுரைக்கு செல்வதற்காக விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பெண்ணின் காதலர் என்று கூறப்படும் சக்தி என்பவர் அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றார். அந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் அவர் விமான நிலையம் வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தம்பி தடுத்து நிறுத்தினார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்து மதுரையில் இருந்து பெண்ணின் பெற்றோர் சென்னை விரைந்தனர். இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் தான் காதலனுடன் செல்ல விரும்புவதாக அந்த பெண் கூறினார்.

ஆனால் பெற்றோரும், உறவினர்களும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மேற் கொண்ட சமரச முயற்சி பலன் அளிக்க வில்லை. இதையடுத்து விமான நிலையத்திற்கு வெளியே போய் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுமாறு அவர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.