மும்பை, ஜன.20: பாண்டியா, லோகேஷ் ராகுலை ஆட அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ)வுக்கு தற்காலிக தலைவர் சி.கே.கன்னா வலியுறுத்தியுள்ளார்.

தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் இளம் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக பிரச்னை எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பிசிசிஐ மேற்கொண்டு விசாரணை முடியும் வரை இருவரையும் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவுடன் ஒரு நாள் தொடரில் இருவராலும் பங்கேற்க முடியாமல் போனது.

இதற்கிடையே பிசிசிஐ வழக்குகள் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ராகுல்-பாண்டியா மீதான விசாரணையை நடத்த தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் எனக் கோரி சிஓஏ மனு தாக்கல் செய்தது. எனினும் அடுத்த வாரத்துக்கு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

மேலும் சில வாரிய நிர்வாகிகள் தீர்ப்பாயத்தை நியமிக்க சிறப்பு பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கோரியுள்ளனர். ஆனால் இதற்கு சி.கே. கன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் விசாரணை அடுத்த வாரம் வரும் நிலையில் சிறப்பு பொதுக்கூட்டத்தை கூட்டுவது சரியாக இராது எனக் கூறிவிட்டார்.
அதே நேரத்தில் விசாரணை முடியும் வரை பாண்டியா-ராகுலை விளையாட அனுமதிக்கலாம் என அவர் சிஓஏவுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.