சென்னை, ஜன.20: டிவி பார்க்க வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த அனைத்து மகளிர் போலீசார் பெயிண்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை பல்லவன் சாலை, சத்யமூர்த்தி நகரில் வசிப்பவர் ரவி (வயது 51). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் வீட்டிற்கு எதிர் வீட்டை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் ரவி வீட்டிற்கு அடிக்கடி வந்து டிவி பார்ப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுமியிடம் ரவி தவறாக நடக்க முயன்றுள்ளார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ரவி நடப்பது குறித்து தனது பெற்றொரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நசீமா தலைமையிலான பெண் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரவியிடம் விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். இதேபோன்று அயனாவரத்தில் 17 வயது பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அருண் (வயது 22) என்பவரை அயனாவரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.