கும்பகோணம், ஜன.21:கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் குடிபோதையில் அட்டூழியம் செய்த மகனை, தாயே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

\கும்பகோணம் வேப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 65). இவரது மகன் கருப்பையன் (வயது 40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
அண்மைக்காலமாக இவர் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தில் உள்ள அனைவரையும் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் இவரது தொல்லை தாங்க முடியாமல், இவரது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில். இவரது குழந்தைகள் இருவரையும், கருப்பையாவின் தாய் மாரியம்மாள் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கருப்பையன், தன் தாயிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாய் மாரியம்மாள் அருகில் இருந்த கட்டையை எடுத்து கருப்பையனை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கருப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை மாரியம்மாள் தன் மகனை அடித்து கொன்றுவிட்டேன் என கூறி திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவிடைமருதூர் காவல்துறையினர், இறந்த கருப்பையாயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.